செய்திகள்
தேசிய பேரிடர் மீட்பு குழு

கடற்கரை கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு முகாம்

Published On 2020-12-02 08:16 GMT   |   Update On 2020-12-02 08:16 GMT
புரெவி புயல் முன் எச்சரிக்கையாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
நாகர்கோவில்:

வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி வங்க கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது புயலாக உருவெடுத்து உள்ளது. இதற்கு புரெவி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புரெவி புயல் இன்று இலங்கை கடலோர பகுதியை அடைந்து நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் புரெவி புயல் தென்தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புரெவி புயல் கரையை கடக்கும்போது, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யுமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலில் சூறைக்காற்று வீசும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து தென்மாவட்டங்களில் புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் புரெவி புயல் கரையை கடக்கும்போது வீசும் பலத்த காற்றாலும், மழையாலும் கடற்கரை கிராமங்கள் உள்பட 75 பகுதிகளில் ஆபத்து ஏற்படலாம் என மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

இந்த பகுதிகளில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக நாகர்கோவில், குளச்சல் பகுதியிலும், விளவங்கோடு தாலுகா பகுதியிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை இம்முகாம்களுக்கு அழைத்து வர அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் புயல் பாதிப்பின் போது மக்களை மீட்கவும், பாதிப்புகளை மின்னல் வேகத்தில் சீரமைக்கவும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்திற்கு 3 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்துள்ளனர்.

அவர்கள், கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் நாகர்கோவில் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இன்று காலையில் அவர்கள் கன்னியாகுமரி, குளச்சல் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். கடற்கரைக்கு வந்தவர்களையும் திருப்பி அனுப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றே நாகர்கோவில் வந்தார். மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் 188 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் கடற்கரை பகுதியில் உள்ள 7 பல்நோக்கு முகாம்கள், 87 தாழ்வான பகுதிகளில் உள்ள முகாம்களில் சமையல் செய்யும் பாத்திரங்கள், ஜெனரேட்டர், பாய், பெட்ஷீட்கள் தயார் நிலையில் உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் உவரி மற்றும் கூடுதாழை பகுதியில் மட்டும் குடியிருப்பு கள் கடற்கரையை ஒட்டி வருகின்றன. உவரியில் சுமார் 60 வீடுகளில் உள்ளவர்களையும், கூடுதாழையில் 15 வீடுகளில் உள்ளவர்களையும் வெளியேறி பாதுகாப்பான முகாம்களுக்கு செல்ல வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இவர்கள் உள்பட கடற்கரை கிராமங்களில் சுமார் 500 பேரை வெளியேற்றி பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க 3 ஷிப்ட்களாக 3 தலைமை என்ஜினீயர்கள் கண்காணிப்பில் 15 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அணை பகுதியில் தங்கி இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாஞ்சோலை மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர்கள், பேரிடர் மீட்பு படையினர் சென்று தயார் நிலையில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 54 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்கள் தங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை பகுதியான திரேஸ்புரம் பகுதியில் மட்டும் சுமார் 50 குடும்பங்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 500 பேர் வரை கடற்கரை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்துக்கு 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவில் 60 பேர் வந்துள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் உவரி கடற்கரை பகுதிக்கும் மற்றொரு பிரிவினர் மாஞ்சோலை மலைப்பகுதிக்கும் மற்றொரு பிரிவினர் நெல்லையிலும் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோக தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் இன்று தாழையூத்து வந்துள்ளனர். அவர்களும் தீயணைப்பு மீட்பு படையினருடன் இணைந்து தாழ்வான பகுதிகளிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் செல்ல தயார் நிலையில் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 2 குழுவாக 40 பேர் வந்துள்ளனர். இவர்கள் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பு குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மின்சப்ளையை கண்காணித்து வருகிறார்கள்.

பலத்த காற்றில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அதனை மாற்றவும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து பகுதியிலும் தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள ஏதுவாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தப்பகுதிகளில் துணை ஆட்சியர் நிலை அலுவலர் தலைமையில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்திட 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டடங்கள் உட்பட திருமண மண்டபங்கள், பள்ளி கட்டடங்கள் என மொத்தம் 197 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சுவர் கொண்ட ஓட்டு வீடுகள், குடிசைகளில் வசிக்கும் மக்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்திட வேண்டும்.

இதன் காரணமாக மரங்கள் ஏதும் சாயும் பட்சத்தில் சாலை போக்குவரத்து பாதிக்காத வகையில் உடனடியாக சீர்செய்திட ஏதுவாக 98 எண்ணிக்கையில் உயர் மின் அழுத்த மர அறுவை எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல மின் கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமடையும் பட்சத்தில் போர்க்கால அடிப்படையில் சீர் செய்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலர்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

மேலும் மீட்பு பணிகளுக்காக 324 ஜே.சி.பி எந்திரங்கள், 24 உயர் மின்அழுத்த தண்ணீர் உருஞ்சு பம்புகள், 16800 மணல் மூட்டைகள், 3563 மின்கம்பங்கள், 1020 சவுக்கு மரக்கட்டைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மீனவ கிராமங்களிலும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்புடன் இருப்பது மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவசரகால சூழ்நிலைக்கேற்ப பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அரசுத்துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புரெவி புயல் முன் எச்சரிக்கையாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுபோல கடற்கரை கிராமங்களிலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News