செய்திகள்
டுவிட்டர் பதிவு

தள்ளிபோகும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு- தற்கொலை செய்யப்போவதாக ரசிகர் பகீர்

Published On 2020-12-02 06:12 GMT   |   Update On 2020-12-02 09:19 GMT
ரஜினியின் அரசியல் அறிவிப்பு தள்ளி போகும் நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், ரஜினி கட்சி தொடங்காவிட்டால் தற்கொலை செய்துக்கொள்வேன் என டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்:

கடந்த 2017-ல், ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பின், அவர் எப்போது வருவார் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரசிகர்களும் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகின்றனர்.

மீண்டும் நேற்றுமுன்தினம் ரஜினி தனது மக்கள் மன்ற தலைவர்கள், செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். ஒவ்வொரு முறையும் நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி, அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருப்பதால், பலரும் நம்பிக்கை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ரசிகர் மன்ற நகர செயலாளர் சத்தியமூர்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றுமுன்தினம் இரவு 8.45 மணிக்கு, மக்கள் தலைவர், அரசியலுக்கு வரமாட்டார் என்ற சூழ்நிலை நிலவுகிறது. நேற்று (1-ந்தேதி) அறிவிப்பு வரவில்லை என்றால் தற்கொலை செய்ய உள்ளேன் என்றும் மக்கள் தலைவர் வழியில் என கருத்தை வெளியிட்டு இருந்தார்.

தொடர்ந்து சில மணி நேரத்தில், அனைவரும் மன்னிக்கவும், மன உளைச்சலால் இந்த பதிவினை போட்டுவிட்டேன். தஞ்சை மாவட்ட தலைவர் என்னிடத்தில் பேசி தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். களபணி செய்தவருக்கு தான் அந்த வலி தெரியும் எனவும் பதிவிட்டு இருந்தார். இது தஞ்சை ரசிகர் மன்ற நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை பெரிது செய்து விட வேண்டாம். ஏற்கனவே மன உளைச்சலில் உள்ளேன். இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றார்.
Tags:    

Similar News