செய்திகள்
வைகை அணை

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக 5,000 கன அடி தண்ணீர் திறப்பு

Published On 2020-12-01 05:29 GMT   |   Update On 2020-12-01 05:29 GMT
வைகை அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மற்றும் மேலூர் பகுதி இரு போக பாசன நிலங்களுக்காக முறைப்பாசன அடிப்படையில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளுக்கு முறைப்பாசன அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 62 அடி வரை உயர்ந்ததால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி நேற்று முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இருந்தபோதும் அணையின் பிக்அப் டேம் பகுதியில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்ததால் அவரை தேடும் பணியில் ஊழியர்கள், தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். மாலை 4.30 மணியளவில் அவர் உடல் மீட்கப்பட்ட பின்பு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

71 அடி உயரமுள்ள வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி 60.37 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1513 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்ட வைகை பூர்வீக பாசனத்துக்காகவும், மதுரை குடிநீர் தேவைக்காகவும் சேர்த்து 5059 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் இருப்பு 3673 மில்லியன் கனஅடியாக உள்ளது. தற்போது திறக்கப்படும் இந்த தண்ணீர் வருகிற 17-ந் தேதி வரை 3 கட்டங்களாக 1792 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட பாசன நிலங்களுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அணையில் இருபுறம் உள்ள கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு அடுத்து வரும் நாட்களில் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக உள்ளது. வரத்து 484 கன அடி. திறப்பு 1444 கன அடி. நீர் இருப்பு 3748 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.50 அடி. வரத்து 41 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 425 மில்லியன் கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.31 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 100.05 மில்லியன் கன அடி.
Tags:    

Similar News