செய்திகள்
வானதி சீனிவாசன்

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா எத்தனை தொகுதிகளில் போட்டி?- வானதி சீனிவாசன் பதில்

Published On 2020-11-28 03:42 GMT   |   Update On 2020-11-28 03:42 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் எத்தனை இடங்களில் பா.ஜனதா போட்டியிடும் என்பது தொடர்பாக அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
நாகர்கோவில்:

பா.ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

மகளிர் மேம்பாட்டுக்காக, மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் கூட பெண்கள் பயன் அடைந்துள்ளனர். அதேபோல் முத்ரா வங்கி கடன் திட்டத்திலும் பெண்கள் அதிக அளவு பயன் அடைந்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் பெண்கள் வங்கி கணக்கில் 3 மாதம் பணம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,

பாலியல் குற்ற வழக்கில் விசாரணை முடிந்து தண்டனை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது, தண்டனை விரைவில் கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும், சட்ட நடவடிக்கை வேகமாக இருக்க வேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தலில் எத்தனை இடங்களில் பா.ஜனதா போட்டியிடும் என்பதை கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும். தமிழகத்தில் நடந்து வரும் வேல் யாத்திரை மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள். தென் இந்தியாவில் பா.ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது.

தெலுங்கானாவில் தற்போது டி.ஆர்.எஸ்.- பா.ஜனதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரஜினி சிறந்த நடிகர், ஆன்மிகவாதி. அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அரசியலுக்கு அவர் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில மகளிரணி செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட தலைவி மகேஸ்வரி, செயலாளர்கள் திலகவதி, கலா, துணை தலைவர் தீபா பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News