செய்திகள்
திருமணம்

மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி

Published On 2020-11-27 03:02 GMT   |   Update On 2020-11-27 07:39 GMT
நாகர்கோவிலில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போனது. இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பெண் என்ஜினீயருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். பின்னர் 26-ந் தேதி (அதாவது நேற்று) இருவருக்கும் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தன. பத்திரிகை அச்சிட்டு தங்களுடைய உறவினர்களுக்கு கொடுத்தனர்.

மணமகளும், வருங்கால வாழ்க்கையை நினைத்து பூரிப்பில் இருந்தார். திருமண தேதியும் நெருங்கியது. நேற்றுமுன்தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன. மணமகளின் பெற்றோர், திருமணம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று உற்சாகமாக விருந்தோம்பல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மணமகனும் பங்கேற்றார். இவர் தான், தனக்கு கணவராக வரப்போகிறார் என்ற நினைவலையில், மனதுக்குள் பல ஆசைகளை வைத்தபடி மணமகளும், உற்சாகமாக உறவினர்களை வரவேற்றபடி இருந்தார்.

அந்த சமயத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. அதாவது வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற மாப்பிள்ளையை காணவில்லை என்ற செய்திதான் அது. வெகுநேரமாகியும் அவர் வராததால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை வீட்டாரும், என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினர்.

அதன்பிறகு தான், திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதனால் பல கனவுகளில் இருந்த மணப்பெண், உடைந்து போனார். அதே சமயத்தில் இருவீட்டாரிடையே ஒருவித சலசலப்பும் ஏற்பட்டது.

மாப்பிள்ளையின் இந்த திடீர் முடிவால் நேற்று நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. பெண் வீட்டார் தரப்பில் முறைப்படி போலீசிடம் புகார் கொடுக்காததால், போலீசாரும் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை.

மணமகன் ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காகத்தான், பெற்றோர் பார்த்த பெண்ணை தவிக்க விட்டபடி பாதியிலேயே சென்றதாகவும் கூறப்படுகிறது. மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
Tags:    

Similar News