செய்திகள்
கோப்பு படம்

நிவர் புயல்- கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்

Published On 2020-11-25 07:15 GMT   |   Update On 2020-11-25 07:15 GMT
நிவர் புயல் எதிரொலியாக கொடைக்கானலில் இன்று முதல் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல்:

தமிழகத்தில் 7 மாவட்டங்களை நிவர் புயல் நேற்றுமுதல் அச்சுறுத்தி வருகிறது. அரசு சார்பில் புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் மக்கள் கவனமுடன் இருக்க அறிவுரை வழங்கி உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் புயல் அச்சுறுத்தல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து சுற்றுலாத்தலங்களும் இன்று முதல் மூடப்பட்டது.

பில்லர்ராக், மோயர்பாயிண்ட், பைன் மரச்சோலை, குணாகுகை, மன்னவனூர் சூழல்சுற்றுலா மையம் ஆகிய இடங்களுக்கு செல்ல தடைவிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஜாபுயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து கொடைக்கானல் மற்றும் மலை கிராம மக்கள் மீளமுடியாத துயரத்திற்கு ஆளானார்கள். எனவே அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பெருமாள்மலை, வடகவுஞ்சி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, சாலையூர், பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மரம் அறுக்கும் எந்திரத்துடன் கண்காணிப்பு பணியில் தயார் நிலையில் உள்ளனர்.

விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலா இடங்களை காணமுடியாமல் ஏமாற்றத்தில் திரும்பிச்சென்றனர்.

Tags:    

Similar News