செய்திகள்
காங்கிரஸ்

ஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு

Published On 2020-11-24 08:48 GMT   |   Update On 2020-11-24 08:48 GMT
தமிழக காங்கிரஸ் சார்பில் வருகிற 28-ந்தேதி ஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.

பா.ஜனதா வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில் தமிழக காங்கிரசும் போட்டியாக தமிழகம் முழுவதும் ஏர்-கலப்பை பேரணியை அறிவித்து நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம் கோவையில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக 71 இடங்களில் வருகிற 28-ந் தேதி பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதில் முன்னாள் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பேரணி நடக்கிறது. ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சேலத்தில் தங்கபாலு, திருச்சியில் திருநாவுக்கரசர் ஆகியோர் தலைமையில் பேரணி நடக்கிறது.

ஒரு மாவட்டத்துக்கு ஒரு சட்டமன்ற தொகுதி வீதம் இந்த 71 இடங்களையும் தேர்வு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக மற்ற சட்டமன்ற தொகுதிகளில் பேரணி நடத்தப்படும் என்றும் போலீஸ் அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் ஏர்-கலப்பை பேரணி நடைபெறும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
Tags:    

Similar News