செய்திகள்
ரெயில்

கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு 25ந் தேதி முதல் ரெயில் இயக்கம்

Published On 2020-11-23 02:03 GMT   |   Update On 2020-11-23 02:03 GMT
கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு 25-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில்:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருப்பதால் மீண்டும் ரெயில் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா காரணமாக நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி இன்டர்சிட்டி ரெயில் மீண்டும் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது. இதேபோல பல்வேறு ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் நிஜாமுதீன் சூப்பர் பாஸ்ட் ரெயில் 25-ந் தேதி முதல் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி- டெல்லி நிஜாமுதீன் (ரெயில் எண் 06011) செல்லும் சூப்பர் பாஸ்ட் ரெயில் 25-ந் தேதி முதல் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இரவு 7.05 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். புதன்கிழமை கிளம்பும் ரெயில் வெள்ளிக்கிழமையும், வெள்ளிக்கிழமை கிளம்பும் ரெயில் ஞாயிற்றுக்கிழமையும், அதாவது மாலை 6.35 மணிக்கு டெல்லி நிஜாமுதீன் சென்றடையும். நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இதே போல டெல்லி நிஜாமுதீன்- கன்னியாகுமரி (ரெயில் எண் 06012) வரும் சூப்பர் பாஸ்ட் ரெயில் டெல்லியில் இருந்து 28-ந் தேதி முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.20 மணிக்கு புறப்படும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். இந்த ரெயிலில் 2 மற்றும் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகளும், 8 தூங்கும் வசதி பெட்டிகளும், 2-ம் வகுப்பு பெட்டிகள் 4-ம் இடம் பெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News