செய்திகள்
நீர்மட்டம் 111.20 அடியாக உயர்ந்த நிலையில் பாபநாசம் அணையை காணலாம்

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு

Published On 2020-11-18 02:04 GMT   |   Update On 2020-11-18 08:57 GMT
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையொட்டி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைப்பகுதியில் 138 மில்லி மீட்டர் மழை கொட்டியது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 101.50 அடியாக இருந்தது. இது நேற்று 111.20 அடியாக அதிகரித்து இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் உள்பகுதியில் உள்ள பானதீர்த்தம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாவட்டம் முழுவதும் மழை பெய்வதால் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் அளவு 812 கன அடியாக குறைக்கப்பட்டது.

இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 18.50 அடி உயர்ந்துள்ளது. அதாவது 100 அடியில் இருந்து 118.50 அடியாக உயர்ந்து உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 900 கன அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் 82.80 அடியில் இருந்து 86.10 அடியாக உயர்ந்து இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக பெருங்கால்வாயில் 25 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது.

52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 35 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வருகிற 40 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக அப்படியே வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணைக்கு நேற்று 91 கன அடி தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. நம்பியாறு அணைக்கு நீர்வரத்து 11.34 கன அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. கடனா அணை நீர்மட்டம் 72 அடியில் இருந்து 76.50 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்காக 70 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து 145 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 58 அடியில் இருந்து 62 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 172 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 95.50 அடியில் இருந்து 97 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 66 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது. இந்த மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளன.
Tags:    

Similar News