செய்திகள்
காசி

சென்னை மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி?- சிபிசிஐடி விசாரணையில் தகவல்

Published On 2020-11-09 04:07 GMT   |   Update On 2020-11-09 08:03 GMT
சென்னையை சேர்ந்த மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் பெண்களுடன் நெருங்கி பழகியதோடு ஆபாச புகைப்படம் எடுத்து அதை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் காசி மீது 5 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் மீது ஒரு கந்துவட்டி வழக்கும் உள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காசி தன்னை காதலிப்பது போல நடித்து ஏமாற்றியதோடு பணத்தையும் மிரட்டி பறித்ததாக சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் சென்னை மாணவியுடன் காசிக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை காசி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது சென்னையை சேர்ந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக காசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அதன் மூலமாகவே பேசியும், பழகியும் வந்தனர். பின்னர் அவரை காதலிப்பதாக கூறி நேரில் சந்திக்க காசி சென்னைக்கு சென்றுள்ளார்.

இதே போல அந்த மாணவியையும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரவழைத்து இருக்கிறார். கன்னியாகுமரி வந்த மாணவியை காசி காரில் பல்வேறு இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது 4 வழிச்சாலையில் காரை நிறுத்திவிட்டு ஆசை வார்த்தைகள் கூறி காரில் வைத்தே உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது தனது கைக்கெடிகாரம் மற்றும் செல்போன் மூலம் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவியிடம் பணம் பறிப்பு செயலிலும் ஈடுபட்டார். இந்த விவரங்களை மாணவி தனது புகாரில் கூறியுள்ளார்.

மாணவியிடம் இருந்து எவ்வளவு பணத்தை காசி மிரட்டி பறித்தார்? இதில் காசியின் நண்பர்கள் உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு காசியிடம் விசாரணை நடத்த சென்னையில் இருந்து சைபர் கிரைம் போலீசாரும் வந்துள்ளனர். லேப்டாப்பில் உள்ள முக்கிய தகவல் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. மேலும், காசி தொடர்பான மற்ற பாலியல் வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது.
Tags:    

Similar News