செய்திகள்
திருச்சி மாநகர் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒட்டி உள்ள சுவரொட்டியை காணலாம்

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் திருச்சியில் போட்டி?- சுவரொட்டிகளால் பரபரப்பு

Published On 2020-11-05 01:43 GMT   |   Update On 2020-11-05 01:43 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் திருச்சியில் போட்டியிட்டு கோட்டைக்கு செல்வார் என ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி:

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இந்நிலையில் வருகிற 7-ந் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து திருச்சி நகரின் பல்வேறு இடங்களிலும் பிரமாண்டமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில் ‘திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அரசாள போகும் நம்ம(வர்) முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த சுவரொட்டிகள் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தற்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளார். நடைபெறவுள்ள தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் திருச்சி பகுதியை சேர்ந்த தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவர் நிற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இந்த சூழலில் கமல்ஹாசன் திருச்சியில் போட்டியிட இருப்பதாக இடம் பெற்றுள்ள வாசகங்கள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பையும், மற்ற கட்சி பிரமுகர்கள் மத்தியில் கடுமையான கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி என்றாலும் அவர் வளர்ந்தது, கலையுலகில் சேர்ந்து நட்சத்திர நடிகர் ஆகியது, அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது சென்னை நகரம் தான். தலைசிறந்த ஒரு நடிகராக உள்ள அவருக்கு தனது சொந்த ஊரில் தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது.

இருந்தாலும், அவர் தலைநகர் சென்னையில் கூட ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்யலாம். ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியை குறிப்பிட்டு அவரது நிர்வாகிகள் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகள் அவரது அனுமதி பெற்று தான் ஒட்டப்பட்டதா? அல்லது கட்சி நிர்வாகிகள் ஆர்வ மிகுதியினால் இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டினார்களா? என தெரியவில்லை.
Tags:    

Similar News