செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசு உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு

Published On 2020-11-01 01:11 GMT   |   Update On 2020-11-01 01:11 GMT
சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி சாலை அமைக்கும் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
சென்னை:

சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி சாலை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக நாமக்கல் மாவட்டம் அக்கியாம்பட்டி கிராமத்தில் உள்ள சில வீடுகள் உள்ள நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டன. இதை எதிர்த்து வீடுகளின் உரிமையாளர்கள் 9 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வீட்டிற்கு எதிரில் உள்ள அரசு நிலத்தை திட்டத்திற்கு பயன்படுத்தாமல், குடியிருக்கும் வீடுகளை கையகப்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், விதிமுறைகளை முறையாக பின்பற்றி நிலங்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நிலம் கையகப்படுத்தும் அதிகாரி ஆட்சேபனை மனுக்களை பெற்று உரிய ஆவணங்களுடன் அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அதிகாரியே மனுதாரர்களின் ஆட்சேபனை மனுக்களை நிராகரித்துள்ளார். நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் விதிகளின்படி அதிகாரிக்கு விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் அவர் சமர்ப்பிக்க வேண்டும். அதை அரசு ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும்.

ஆனால், இந்த விஷயத்தில் அரசும் எந்திரத்தனமாக உத்தரவிட்டுள்ளது. எனவே, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கையில் ஆட்சேபனை மனுக்களை நிராகரித்ததும், அந்த நிலங்களை அரசுடைமையாக்கியும் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்கிறேன்.

நிலம் கையகப்படுத்தும் அதிகாரி மனுதாரர்களின் ஆட்சேபனை தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

அவற்றை தமிழக அரசு கவனத்துடன் மனதை செலுத்தி உரிய முறையில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தையும் 12 வாரத்தில் முடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News