செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட சுறா துடுப்புகளை படத்தில் காணலாம்.

துபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்

Published On 2020-10-29 02:44 GMT   |   Update On 2020-10-29 02:44 GMT
சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்புள்ள 23½ கிலோ சுறா துடுப்புகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் பெரும் அளவில் கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் துபாய் செல்ல வந்த 2 பேர் கையில் அட்டைபெட்டிகளுடன் சந்தேகப்படும்படியாக குடியுரிமை பகுதியில் இருந்து பாதுகாப்பு பகுதிக்கு சென்றனர்.

உடனே சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரிடமும் விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னையை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 52), திருச்சியை சேர்ந்த அப்பாஸ் (29) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்தபோது அதில் சுறா மீன்களின் துடுப்புகளை துபாய்க்கு கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

2 பேரிடம் இருந்தும் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 23½ கிலோ சுறா துடுப்புகளை பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் சூப் வகைகளுக்கு சுறா மீன் துடுப்புகளுக்கு அதிக மவுசு என்பதால் அதை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News