பத்மநாபபுரத்தில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி அதிகாலை முதலே நடைபெற்றது.
இதற்காக விஜயதசமி அன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு சாமி சன்னதியில் நடைபெறும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பார்கள்.
சன்னதியில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மணி மீது குழந்தைகளின் கையை பிடித்து தமிழின் முதல் எழுத்தான அ எழுத வைப்பார்கள். இதுபோல குழந்தைகளின் நாவில் தங்க எழுத்தாணியால் எழுதி இசை, பாடல், போன்றவற்றை கற்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைப்பார்கள்.
பத்மநாபபுரத்தில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் எளிமையாக நடைபெற்றது.
இதில், குழந்தைகள், பெற்றோருடன் வந்து வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுபோல குமரி மாவட்டத்தில் உள்ள பார்வதி புரம் வனமாலிஸ்வரர் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் ஏடு தொடங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. மீனச்சல் ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோவிலில் அதிகாலை முதலே வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து தாய்மார்களுக்கு குழந்தைகள் பாத பூஜை செய்து ஆசி பெற்றனர்.