செய்திகள்
ராமதாஸ்

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தனித்தனி நல வாரியங்கள்- தமிழக அரசுக்கு, ராமதாஸ் கோரிக்கை

Published On 2020-10-23 02:18 GMT   |   Update On 2020-10-23 02:18 GMT
ஆந்திர மாநிலத்தை போல ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தனித்தனி நல வாரியங்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆந்திர மாநில அரசு புதிய புரட்சியைப் படைத்திருக்கிறது. வன்னியகுல சத்திரியர்கள், அக்னிகுல சத்திரியர்கள், முதலியார்கள், யாதவர்கள், விஸ்வ பிராமணர்கள் என 56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காக, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு நல வாரியத்தை ஆந்திர அரசு அமைத்துள்ளது.

சமுதாயங்களின் முன்னேற்றத்திற்கான இந்த நடவடிக்கை மிக மிக வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.

தமிழகத்திலும் இத்தகைய சமுதாய நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அனைத்து சமுதாயங்களும் சம அளவில் வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி நல வாரியங்களை அமைப்பதன் மூலம் அச்சமுதாயங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்குமான நீடித்த வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சமவாய்ப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் ஒரு போராட்டம் நடத்தித்தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றால் அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம். கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்த பின்னர் புத்தாண்டில் வன்னியர்களுக்கான 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் தொடங்கப்படும்.

போராட்டத்தின் போதே, ‘போராட்டத்தைக் கைவிட்டு வாருங்கள்... வன்னியர்கள் தனி இடஒதுக்கீட்டுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள்’ என்று அரசு நமக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் கடுமையாக அமையும். வன்னியர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்பதற்காக அனைவரும் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News