செய்திகள்
வங்கி கணக்கு

டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7½ லட்சம் ‘அபேஸ்’

Published On 2020-10-22 02:29 GMT   |   Update On 2020-10-22 02:29 GMT
டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.7½ லட்சம் திருடியதாக, அவரது வீட்டு வேலைக்கார பெண்ணின் மகனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 75). டாக்டரான இவர், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் வயதான இவரை கவனித்துக்கொள்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார்.

அந்த பெண், தனது 17 வயது மகனுடன் டாக்டர் வீட்டின் மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, டாக்டருக்கு சமையல் செய்து கொடுத்து அவரை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் டாக்டர் முருகேசன், தனது வங்கி கணக்கில் இருந்து திடீர் திடீரென பணம் மாயமாவதாக அண்ணாநகர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக டாக்டர் வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண் மற்றும் அவரது மகனிடம் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

டாக்டர் முருகேசன் தனக்கு வேண்டிய பொருட்களை வாங்க, வேலைக்கார பெண்ணின் மகனிடம் இருந்து செல்போனை வாங்கி அதில் தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கி வந்தார். அப்போது அவரது ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்ட சிறுவன், அதன்பிறகு டாக்டருக்கு தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ஆன்லைனில் விளையாடுவதற்கும், ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்கும் பணத்தை திருடி செலவு செய்து உள்ளார்.

தனது நண்பர்களுக்கும் புதிய செல்போன்கள் மற்றும் மடிக்கணினியை ரூ.1 லட்சத்துக்கு டாக்டர் வங்கி கணக்கில் இருந்து வாங்கியதும் தெரியவந்தது. இவ்வாறு சுமார் 6 மாதங்களாக டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து சிறுக சிறுக ரூ.7½ லட்சம் வரை எடுத்து மோசடி செய்து உள்ளார்.

அந்த சிறுவனிடம் இருந்து 3 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிறுவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News