செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வருகை

Published On 2020-10-21 08:32 GMT   |   Update On 2020-10-21 08:32 GMT
திருச்சிக்கு நாளை (வியாழக்கிழமை) வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க.வினர் திரண்டுவர அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி:

கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக புதுக்கோட்டைக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) வருகிறார். அதற்காக, சென்னையில் இருந்து அன்று காலை விமானத்தில் புறப்பட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 8.30 மணிக்கு வருகிறார்.

அங்கு அவருக்கு, திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு காலை 8.30 மணிக்கு வருகிறார். நிகழ்ச்சி முடிந்து மாலை 5 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை செல்கிறார். அது சமயம் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.

எனவே, கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி, வட்ட கழக செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வக்கீல் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, இளைஞர்- இளம்பெண்கள் பாசறை, கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், கோட்டத்தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பளிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News