செய்திகள்
வழக்கு பதிவு

சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்னாள் டீன் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2020-10-20 07:30 GMT   |   Update On 2020-10-20 07:30 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உபகரணங்கள் வாங்கியதில் ரூ.12 லட்சத்து 48 ஆயிரத்து 350 முறைகேடு செய்தது தொடர்பாக முன்னாள் டீன் கார்த்திகேயன் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களில் பலர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 2013-2014-ம் ஆண்டில் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனத்தின் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சில உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை அரங்கில் நவீன உபகரணம் ஒன்று தனியார் மருந்து நிறுவனத்திடம் இருந்து ரூ.9½ லட்சத்து 250-க்கு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் மட்டுமே ஆகும். எனவே இந்த உபகரணம் வாங்கியதில் ரூ.7 லட்சத்து 250 முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் மயக்கமருந்து செலுத்தும் 2 உபகரணங்கள் ரூ.9 லட்சத்து 21 ஆயிரத்து 900-க்கு வாங்கப்பட்டது. ஆனால் இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 800 ஆகும். எனவே இந்த உபகரணங்கள் வாங்கியதில் ரூ.5 லட்சத்து 48 ஆயிரத்து 100 முறைகேடு நடந்தது தெரியவந்தது. உபகரணங்கள் வாங்கியதில் மொத்தம் ரூ.12 லட்சத்து 48 ஆயிரத்து 350 முறைகேடு நடந்துள்ளது.

இதையடுத்து அப்போது டீனாக இருந்த கார்த்திகேயன், நிர்வாக அலுவலர் இளங்கோவன், கிடங்கு கண்காணிப்பாளர் தண்டபாணி, கொள் முதல் பிரிவு உதவியாளர் அசோக்ராஜ் மற்றும் மருந்து சப்ளை செய்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் கார்த்திகேயன் பணி ஓய்வு பெற்று தற்போது திருச்சியில் வசித்து வருகிறார். இளங்கோ ஓய்வு பெற்றுவிட்டார். அசோக்ராஜ் இறந்துவிட்டார். கிடங்கு கண்காணிப்பாளராக இருந்த தண்டபாணி சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏற்கனவே மருந்து வாங்கியதில் ரூ.40 லட்சம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News