செய்திகள்
கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் மற்றும் முனியசாமி

மதுரை அருகே பஞ்சாயத்து தலைவர்-ஊழியர் படுகொலை: பெண் உள்பட 8 பேரிடம் விசாரணை

Published On 2020-10-14 07:23 GMT   |   Update On 2020-10-14 07:23 GMT
மதுரை அருகே பஞ்சாயத்து தலைவர், ஊழியர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண் உள்பட 8 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வரிச்சியூரை அடுத்துள்ளது குன்னத்தூர். இந்த ஊராட்சியின் தலைவர் கிருஷ்ணன். அலுவலக பம்ப் ஆப்பரேட்டர் முனிசாமி ஆகியோர் குன்னத்தூர் மலைக்குன்று பகுதியில் கடந்த 11-ந் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

மறுநாள் (12-ந் தேதி) காலை தான் அவர்கள் கொலை செய்யப்பட்ட விவரம் உறவினர்கள் மற்றும் குன்னத்தூர் மக்களுக்கு தெரியவந்தது.

இதனால் குன்னத்தூர் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட 2 பேரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வரிச்சியூர், குன்னத்தூரில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணன், முனிசாமி ஆகியோரது உடல்கள் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறிய கிருஷ்ணன், முனிசாமி உறவினர்கள் பனகல் சாலையில் மறியலுக்கு முயன்றனர்.

கொலை வழக்கில் குன்னத்தூர் ஊராட்சி மன்ற செயலாளர் (பொறுப்பு) வீரணன் என்ற பால்பாண்டி மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதி மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என்று உறுதியளித்தனர்.

அதன் பிறகு கிருஷ் ணன், முனிசாமி உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து இறுதிச்சடங்கிற்காக 2 பேரின் உடல்களும் குன்னத்தூர் கொண்டு செல்லப்பட்டன.

அப்போது வழியில் குன்னத்தூர் ஊராட்சி மன்ற செயலாளர் (பொறுப்பு) வீரணன் என்ற பால் பாண்டி வீடு மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

மேலும் வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் படப்புக்கும் தீ வைக்கப்பட்டது. பக்கத்து வீட்டிலும் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை சூறையாடியது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். தீயணைப்பு துறையினரும் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

அந்தப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருப்பாயூரணி போலீசார் விசாரணை நடத்தினர். வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே இரட்டைக்கொலை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து பிரச்சினையால் கொலை நடந்ததா? அல்லது ஊராட்சி செயலர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் மற்றும் முனிசாமி சம்பவத்திற்கு முன்பு யாரிடம் பேசியுள்ளனர் என்பது தொடர்பாக அவர்களது செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் கூறுகையில், சந்தேகத்தின் பேரில் பெண் உள்பட 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

கொலையுண்டவர்களின் செல்போன்களை கைப்பற்றி அதில் உள்ள உரையாடல்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் மூலமும் துப்பு கிடைத்துள்ளது.

குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். இன்னும் 2 நாட்களில் கொலையாளிகளை கைது செய்து விடுவோம் என தெரிவித்தனர்.


Tags:    

Similar News