செய்திகள்
சீமான்

வெளிநாடுகளில் இருந்து வர விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனையில் விலக்கு தேவை -சீமான்

Published On 2020-10-08 08:28 GMT   |   Update On 2020-10-08 08:28 GMT
வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனை செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா கொடுந்தொற்றுக்காலத்தில் வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலர் வேலை இழந்து, உணவிற்கும், உறைவிடத்திற்கும் அல்லலற்பட்டுத் தாங்கொணாத்துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த வேளையில், நாடு திரும்புவதற்கு முன் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையைக் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதன்று.

வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள் மூலமாக அங்கு அல்லற்படும் தமிழர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில் மிகப்பெரிய சுணக்கம் நிலவுகிறது. விமானப் பயணச்சீட்டு வாங்குவதற்குக் கூட இயலாத நிலையில், பல்வேறு இன்னல்களைக் கடந்து இரண்டு மடங்கு விமானக் கட்டணத்தைச் செலுத்தியே தாயகம் திரும்ப முயல்கின்றனர்.

பெருந்துன்பத் துயரங்களுக்கு இடையே விமான நிலையம் செல்லும் தமிழகப் பயணிகளுக்கு, 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட முன் பரிசோதனை முடிவு சான்றிதழ் அவசியம் தேவை என்ற அறிவிப்பு அத்தகைய எளிய மனிதர்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவிற்குத் திரும்பும் பயணிகள் தாங்கள் புறப்படும் முன்பே பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை. அவர்கள் தாயகம் திரும்பியவுடன் தாங்கள் இறங்கும் விமான நிலையங்களிலேயே அறிகுறிகளுக்கேற்ப, பரிசோதனை செய்யலாம்.

அந்த முடிவுகளுக்கேற்ப தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்வதோ அல்லது மருத்துவமனைக்குச் செல்வதோ அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் பயணத்திற்கு முன்பே கொரோனா முடிவு அவசியம் என்ற நடைமுறை முற்றிலும் முரணாகவும், தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்குப் புதிய சிக்கலையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து, நிலைகுலைந்து தமிழகம் திரும்பும் தமிழர்களுக்கு பெரும் சுமையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு சீரிய கவனமெடுத்து மத்திய அரசிடம் உடனடியாக வலியுறுத்தி மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திற்கு வர விரும்பும் பயணிகளுக்கும் முன் பரிசோதனை அறிக்கை தேவையில்லை என்ற நடைமுறையைச் செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News