செய்திகள்
தட்டார்மடம் வியாபாரி செல்வன்

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு- மேலும் 2 பேர் கைது

Published On 2020-10-07 08:16 GMT   |   Update On 2020-10-07 08:16 GMT
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் தண்ணீர் கேன் வியாபாரி செல்வன் (வயது35).

இவரை ஒரு கும்பல், நிலப்பிரச்சினையில் கடத்தி சென்று கொலை செய்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி திருமணவேல், அவரது சகோதரர் முத்து கிருஷ்ணன், உறவினர்கள் சின்னத்துரை, முத்துராமலிங்கம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இவர்களை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்து 4 பேரும் நேற்று கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான 4 பேரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொலை வழக்கில் கருப்பசாமி, இசக்கி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை குழுவினர், இன்று கருப்பசாமி, இசக்கி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருப்பசாமி, இசக்கி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர்களின் செல்போன் எண்களையும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலை நடப்பதற்கு முன்பு யார், யாரிடம் பேசி உள்ளார்கள். கொலைக்கு பிறகு யாரிடம் பேசி உள்ளார்கள். செல்வனை கடத்தி சென்று கொலை செய்த போது யார்? யார்? செல்போன்கள் எந்த டவர் எல்லையில் இருந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News