செய்திகள்
போலீஸ் பாதுகாப்புடன் நடராஜர் சிலை கும்பகோணத்துக்கு எடுத்து சென்றபோது எடுத்த படம்

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு

Published On 2020-10-01 02:10 GMT   |   Update On 2020-10-01 02:10 GMT
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
சேலம்:

சேலம் அரசு கலைக்கல்லூரி எதிரே உள்ள உடையப்பா காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது வீட்டில் இருந்த 3 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்காக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி இரவு சிலையை பார்ப்பதற்காக வெளியூரில் இருந்து 11 பேர் கொண்ட கும்பல் சேலம் வந்தது.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து செல்வகுமார் மற்றும் அவரது நண்பரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு 100 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை கடத்தி சென்றனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாநகர் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். பின்னர் அம்மாபேட்டையில் வைத்து காரில் கடத்தப்பட்ட அந்த சிலையை போலீசார் மீட்டனர்.

இது தொடர்பாக 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதுகாப்பு கருதி பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சிலை சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள திருமேனி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில், தமிழகம் முழுவதும் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரிக்க அரசு அனுமதி வழங்கியது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் கும்பகோணம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு வருகிறது.

சேலம் நடராஜர் சிலை வழக்கும் கும்பகோணம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த சிலையை கோர்ட்டில் ஒப்படைக்க கும்பகோணம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று காலை சுகவனேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளின் அனுமதியோடு சிலையை பெற்றுக்கொண்டு சேலம் கோர்ட்டில் ஒப்படைக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். இதையடுத்து நடராஜர் சிலை சேலம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாஜிஸ்திரேட்டு ராஜபிரபு அனுமதியின் பேரில் நடராஜர் சிலை கும்பகோணத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
Tags:    

Similar News