செய்திகள்
தட்டார்மடம் வியாபாரி செல்வன்

சாத்தான்குளம் அருகே காரில் கடத்தி கொல்லப்பட்ட வியாபாரியின் தாயார் திடீர் மரணம்

Published On 2020-09-29 07:00 GMT   |   Update On 2020-09-29 07:00 GMT
வியாபாரி செல்வன் இறந்ததில் இருந்து மனவேதனையில் இருந்த அவரது தாயார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வன். (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதாக செல்வனின் தாய் எலிசபெத் புகார் செய்தார்.

இதன்பேரில் திசையன் விளை போலீசார் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் ராமன், சின்னதுரை மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருமணவேல் அவரது சகோதரரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

தொடர்ந்து டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 25-ந் தேதி சொக்கன் குடியிருப்புக்கு சென்று செல்வனின் தாய் எலிசபெத், தந்தை தனிஸ்லாஸ், சகோதரர்கள் பங்காருராஜன், பீட்டர்ராஜன் ஆகியோரிடம் விசாணை நடத்தினர்.

செல்வன் இறந்ததில் இருந்து எலிசபெத் சரியாக சாப்பிடாமல் மனவேதனையில் இருந்தார். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று இரவு எலிசபெத்திற்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

மேலும் செல்வன் கொலை தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருவதால் எலிசபெத் இறந்தது குறித்து அவர்களுக்கு தட்டார்மடம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறையில் உள்ள திருமணவேல் மற்றும் அவரது சகோதரர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கோவில்பட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

Similar News