செய்திகள்
வைகை அணையில் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை காணலாம்

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

Published On 2020-09-29 04:01 GMT   |   Update On 2020-09-29 04:01 GMT
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 30 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:

மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கடந்த மாத இறுதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனிடையே பரவலாக மழை பெய்ததால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக நிலங்களின் விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து வைகை அணையில் இருந்து ஏற்கனவே திறக்கப்படும் தண்ணீரோடு, கூடுதலாக வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி கால்வாய் மூலம் வினாடிக்கு 1,800 கனஅடியும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடியும் சேர்த்து மொத்தமாக வினாடிக்கு 1,872 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 30 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி முதல்போக பாசன நிலங்களுக்கு 900 கனஅடியும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக நிலங்களுக்கு வினாடிக்கு 1130 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதே நேரத்தில் வைகை அணைக்கு வினாடிக்கு 1,580 கனஅடி மட்டுமே நீர்வரத்து உள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கால்வாயில் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் கால்வாய் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News