செய்திகள்
காசி

காசி மீதான வழக்கில் மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்

Published On 2020-09-28 09:57 GMT   |   Update On 2020-09-28 09:57 GMT
காசி மீதான வழக்கில் மேலும் ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியனின் மகன் காசி (வயது 27). இவர் மீது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் போக்சோ வழக்கு, வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு ஆகியவை உள்ளன. இந்த வழக்குகளில் காசியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் ஆகியோரிடம் காசி பழகுவது போல் நடித்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. காசிக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய நிபந்தனை ஜாமீன் மூலம் தினேஷ் வெளியே வந்தார். முன்னதாக நாகர்கோவிலை சேர்ந்த டேவிட் என்பவர் அளித்த கந்து வட்டி புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி காசி மீது நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், காசி மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவான போக்சோ வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி சில முக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை திரட்டியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி.யினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இதனைதொடர்ந்து மந்தமாக இருந்த காசி மீதான வழக்கு, இந்த போக்சோ வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் மூலம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
Tags:    

Similar News