செய்திகள்
உயிரிழந்த மகன்-தந்தை

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு விரைவாக நீதி வழங்க வேண்டும்- குடும்பத்தினர் வேண்டுகோள்

Published On 2020-09-28 02:29 GMT   |   Update On 2020-09-28 02:29 GMT
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விரைவாக நீதி வழங்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கூறி கடந்த ஜூன் 19-ந் தேதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் அரங்கேற்றிய சித்ரவதைகளால் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார்.

இந்த வழக்கை முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில், பின்னர் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த வழக்கில் 9 போலீசார் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் போலீஸ் நிலையத்தில் நடந்த சித்ரவதையால் தந்தை-மகன் உயிரிழந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இரட்டை கொலை சம்பவத்தில் விரைவாக நீதி வழங்க வேண்டும் என ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து ஜெயராஜின் மகள் பெர்சிஸ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:-

எனது தந்தையும், சகோதரனும் கொல்லப்பட்ட இந்த வழக்கில் எந்த வித தாமதமுமின்றி விரைவாக நீதி வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை இனிமேல் யாரும் செய்ய துணியமாட்டார்கள்.

இந்த வழக்கில் 90 நாள் கால அவகாசத்துக்குள் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

குறிப்பாக போலீஸ் நிலையத்தில் இருந்து எனது தந்தையும், சகோதரனும் உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது போலியாக உடல் தகுதி சான்றிதழ் வழங்கிய டாக்டர் உள்ளிட்டோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என தெரியவில்லை. அவ்வாறு சேர்க்கவில்லை என்றால், அவர்களின் பெயரையும் சேர்க்க வேண்டும்.

இதுபோன்ற கொடூரங்கள் இனியும் தொடரக்கூடாது. நாங்கள் எங்கள் தந்தையையும், சகோதரனையும் இழந்திருக்கிறோம். இந்த வழக்கில் வழங்கப்படும் கடும் தண்டனை மட்டுமே, இதுபோல அப்பாவிகள் குறி வைக்கப்படுவதை தடுக்கும்.

இவ்வாறு பெர்சிஸ் கூறினார்.
Tags:    

Similar News