செய்திகள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

Published On 2020-09-26 08:35 GMT   |   Update On 2020-09-26 08:35 GMT
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை:

கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ராஜாமணி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன், வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் தினமும் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா உறுதி செய்யப்பட் டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கு நேரில் சென்று பரிசோதனை செய்ய ஏதுவாக 20 நடமாடும் பரிசோதனை வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 11,097 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 11 லட்சத்து 94 ஆயிரத்து 183 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை உறுதிபடுத்தவும் மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேவைகளின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொடிசியா, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 9,136 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதித்தவர்களை விரைவாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஏதுவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவைக்கு கூடுதலாக 12 ஆம்புலன்ஸ்கள் வழங்கி உள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் முக கவசம், கிருமி நாசினி மற்றும் கைக்கழுவும் சோப்பு தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.99,999 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, 4 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவி, ஒரு பயனாளிக்கு ரூ.4,520 மதிப்பிலான ஏர் பெட் என மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 518 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Tags:    

Similar News