செய்திகள்
சுஜன்

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை

Published On 2020-09-25 13:45 GMT   |   Update On 2020-09-25 13:45 GMT
மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு அருகே செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கீதா (வயது 39). இவர்களுடைய மகன் சுஜன் (14), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், சுஜன் எப்போதும் செல்போனில் ‘கேம்‘ விளையாடுவது வழக்கம். இதனை தாயார் கீதா கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுஜன் செல்போனில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்தார். இதை கண்ட கீதா மீண்டும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன், செல்போனை தூக்கி வீசியுள்ளார். இதில் செல்போன் சுக்குநூறாக உடைந்தது. இதையடுத்து புதிய செல்போன் வாங்கித் தருமாறு கேட்டதாகவும், இதற்கு கீதா மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சுஜன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் காலை சுஜன், பசு மாட்டிற்கு புல் அறுத்து வருவதாக தாயாரிடம் கூறி விட்டு வெளியே சென்றார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் சுஜன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவனை மீட்டு சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுஜனின் தாயார் கீதா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் விளையாடியதை தாயார் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News