செய்திகள்
ஆழியாறு அணையில் 9 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டபோது எடுத்த படம்

நீர்வரத்து அதிகரிப்பு- ஆழியாறு அணையில் 9 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

Published On 2020-09-25 08:52 GMT   |   Update On 2020-09-25 08:52 GMT
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆழியாறு அணையில் 9 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
பொள்ளாச்சி:

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அமைந்து உள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் அப்பர் ஆழியாறு அணைகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 20-ந் தேதி அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி 7 மதகுகள் வழியாக உபரிநீர் ஆழியாற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அப்பர் ஆழியாறு அணையில் இருந்து ஆழியாறுக்கு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து 9 மதகுகள் வழியாக அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் வெளியேற்றுவது குறைக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1385 கன அடி நீர்வரத்து உள்ளது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 119.35 அடியாக உள்ளது.

இதேபோன்று நேற்று காலை 8 மணி நிலவரப்படி பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 3285 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 71.62 அடியாக உள்ளது. சோலையாரில் 4 மி.மீ., பரம்பிக்குளத்தில் 3 மி.மீ., வால்பாறை 4 மி.மீ., மேல்நீராறு 6 மி.மீ., கீழ்நீராறு 3 மி.மீ., மணக்கடவு 1 மி.மீ. மழை பதிவானது.
Tags:    

Similar News