செய்திகள்
புதிதாக உருவான மணல் திட்டு

தனுஷ்கோடி கடலில் புதிதாக உருவான மணல் திட்டு

Published On 2020-09-25 04:06 GMT   |   Update On 2020-09-25 04:06 GMT
தனுஷ்கோடி பகுதியில் அரிச்சல்முனை வடக்கு கடல் பகுதியில் கடலின் நடுவே புதிதாக மணல் திட்டு ஒன்று உருவாகி உள்ளது.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதி இயற்கையாகவே கடல் சீற்றம் உள்ள பகுதியாகும். தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் 13 மணல் திட்டுகள் உள்ளன.

இதில் 5-வது மணல் திட்டுடன் இந்திய கடல் பகுதி முடிவடைகிறது. அதன்பிறகு இலங்கை கடல் பகுதி ஆரம்பித்து விடுகிறது. கடலுக்குள் அமைந்துள்ள மணல் திட்டுகள் பகல் நேரத்தில் மணல்பரப்பாகவும், இரவில் நீர் சூழ்ந்து கடலாகவும் காணப்படுவது வழக்கம். அதுபோல் தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் படகை மணல்திட்டு அருகே நங்கூரமிட்டு நிறுத்தி, மணல் திட்டுகளில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு வலைகளை சரிசெய்வது வழக்கம்.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதனாலோ என்னவோ அரிச்சல்முனை வடக்கு கடல் பகுதியில் கடலின் நடுவே புதிதாக மணல் திட்டு ஒன்று உருவாகி உள்ளது. அந்த மணல் திட்டுக்கு ஏராளமான கடல் புறாக்கள் வந்து செல்கின்றன. தனுஷ்கோடி கடலில் புதிதாக உருவான மணல் திட்டு காண்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சி தருகிறது.
Tags:    

Similar News