செய்திகள்
மதுரை விமான நிலையம்

வந்தே பாரத் திட்டத்தில் 8,827 பேர் மதுரைக்கு வருகை

Published On 2020-09-25 03:24 GMT   |   Update On 2020-09-25 03:24 GMT
ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் தென்மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 827 பேர் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
மதுரை:

மதுரை விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு வெளிநாடு, உள்நாட்டு நகரங்கள் என 25 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதியில் இருந்து இந்த விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னர் மே மாதத்தில் உள்நாட்டு விமான சேவை அதாவது மதுரையில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட சில நகரங்களுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது.

இதுபோல், ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்கான விமான சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டுமே இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி மதுரைக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், லெபனான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தென்மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இதுவரை 57 சிறப்பு விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டுள்ளன. அதில், தென் மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 827 தொழிலாளர்கள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவ்வாறு வந்து சென்றவர்களில் கர்ப்பிணிகள், குழந்தைகள் தவிர 8 ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும், 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வருவதாகவும், அவ்வாறு இல்லாதவர்களுக்கு மட்டுமே விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட்டிற்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் 120 பயணிகள் சென்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News