செய்திகள்
கைது

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு- சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

Published On 2020-09-24 08:02 GMT   |   Update On 2020-09-24 08:02 GMT
திருச்சியில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

வேளாண் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சியில் இன்று வேளாண் மசோதா சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று காலை கண்டோன்மெண்ட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திரண்டு வந்தனர். அவர்கள் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.

பின்னர் வேளாண் மசோதா சட்ட நகல்களை தீ வைத்து எரித்தனர். உடனே அங்கிருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News