செய்திகள்
தட்டார்மடம் வியாபாரி செல்வன்

தட்டார்மடத்தில் கொலை செய்யப்பட்ட வியாபாரி குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Published On 2020-09-24 07:47 GMT   |   Update On 2020-09-24 07:47 GMT
தட்டார்மடத்தில் கொலை செய்யப்பட்ட வியாபாரி வீட்டிற்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் குடும்பத்தினரை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வன் கடந்த 17-ந்தேதி ஒரு கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. நிர்வாகியாக இருந்த திருமணவேல் உள்பட சிலர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக முத்து ராமலிங்கம், சின்னதுரை, ராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.

அதன்படி வழக்கு ஆவணங்களை வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் நேற்று மதியம் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமாரிடம் ஒப்படைத்தார்.

அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்ட அவர் புதிதாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். இதற்காக தலா 5 போலீசார் கொண்ட 6 குழுக்களை அமைத்து விசாரணை தொடங்கப்பட்டது.

நேற்று மாலை அனில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உலகராணி, தேவி, பிறைசந்திரன், சமீதா உள்ளிட்ட 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 25 பேர் 7 கார்களில் திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்திய காரை பார்வையிட்டனர்.

தொடர்ந்து சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு பகுதிக்கு சென்றனர். செல்வனின் மோட்டார் சைக்கிளில் காரை மோதவிட்டு அவரை கடத்தி சென்ற பகுதியை ஆய்வு செய்தனர். அங்குள்ள முருங்கை கமி‌ஷன் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்தனர்.

கொலையாளிகளை கண்டவுடன் செல்வன் அங்கிருந்து ஓடிச்சென்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் பின்புறம் மறைந்திருந்தார். இதனால் கொலையாளிகள் தங்களது கார் மூலம் தண்ணீர் லாரியை சேதப்படுத்தினர். அதனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்தனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள், வியாபாரிகளிடமும் விசாரணை நடத்தினர். செல்வனின் உடல் வீசப்பட்ட கடக்குளம் காட்டுப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் அதன்பின் நெல்லை திரும்பினர்.

இன்று 2-வது நாளாக சொக்கன்குடியிருப்பு பகுதிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் செல்வனின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

தொடர்ந்து கைதான 3 பேர் மற்றும் சரணடைந்த 2 பேர் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதால் விரைவில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News