செய்திகள்
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவில் பெய்யும்- கோவை வேளாண்மை பல்கலைக்கழகம்

Published On 2020-09-23 09:34 GMT   |   Update On 2020-09-23 09:34 GMT
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சராசரியாகவே இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
கோவை:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எதிர்வரக்கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர்-டிசம்பர் குறித்த முன் அறிவிப்பு செய்வதற்காக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தி ஆஸ்திரேலிய மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு பருவமழை முன் அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் அரியலூர், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாகை, நாமக்கல், பெரம்பலூர் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழை அளவு இருக்கும்.

காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் சராசரியை விட அதிகமாகவும், நீலகிரியில் சராசரி அளவையொட்டியும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட், செப்டம்பரில் தமிழகத்தில் சில பகுதிகளில் சராசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக மழைப்பொழிவு பெறப்பட்டிருப்பதால் மண்ணில் தேவையான அளவுக்கு ஈரப்பதம் இருக்கும். இதைப் பயன்படுத்தி விதைப்பு செய்வதன் மூலம் பயிரின் முதன்மை நீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எதிர்வரக்கூடிய பருவத்திலும் சராசரி மழை எதிர்பார்க்கப்படுவதால் தற்போது விதைக்கும் பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைப்பதுடன் மகசூலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News