செய்திகள்
காசி

காசியின் நண்பருக்கு ஜாமீன்- சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஆஜராகும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-09-23 05:33 GMT   |   Update On 2020-09-23 05:33 GMT
ஆபாச பட விவகாரத்தில் நாகர்கோவில் காசியின் நண்பருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மேலும் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஆஜராகவும் உத்தரவிட்டது.
மதுரை:

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் பெண்களை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் காசியின் நண்பர் தினேஷ் என்பவரும் கைதானார்.

தற்போது சிறையில் இருக்கும் தினேஷ், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துவிட்டேன். சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். என் மீது கொடுத்த பொய்யான புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்ததால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மனுதாரர் மற்றும் அவரது நண்பர் காசியிடம் இருந்து லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்தது பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது மேலும் சில வழக்குகள் உள்ளன. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்தார்.

மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, “இந்த வழக்கின் தீவிரத்தை அறியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை அதிகாரி செயல்பட்டு வருகிறார். பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. வழக்குபதிவு செய்து 90 நாட்களுக்கு மேல் ஆகியும் கீழ் கோர்ட்டில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? குறைந்தபட்சம் இடைக்கால அறிக்கையாவது தாக்கல் செய்திருக்கலாமே?” என கேள்வி எழுப்பினார்.

பின்னர், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு இந்த கோர்ட்டில் ஆஜராகி, வழக்கு விசாரணை விவரங்களை தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News