செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா ஊரடங்கில் சிறுமிகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்

Published On 2020-09-20 08:10 GMT   |   Update On 2020-09-20 08:10 GMT
கொரோனா ஊரடங்கால் விபத்து, கொலை, கொள்ளை, மோதல் உள்ளிட்ட குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. இது ஒருபுறம் ஆறுதல் அளித்தாலும் மறுபுறும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து, கொலை, கொள்ளை, மோதல் உள்ளிட்ட குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. இது ஒருபுறம் ஆறுதல் அளித்தாலும் மறுபுறும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை 47, ஈரோடு 55, திருப்பூர் 50, சேலம் 34, நாமக்கல் 52, தருமபுரி 55, கிருஷ்ணகிரி 22 வழக்கு என மேற்கு மண்டலத்தில் 296 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த பாலியல் தொல்லை பெரும்பாலும் உறவினர் மற்றும் தெரிந்தவர்கள் மூலமே அதிகம் நடந்துள்ளது.

மேலும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் தங்களின் போட்டோக்களை ஆர்வகோளாறால் சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் இதனை நோட்டமிடும் கும்பல் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். பாலியல் தொல்லை கொடுத்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா கூறியதாவது:-

பெற்றோர் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேசி பேடு டச், குட் டச் என்பதை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்களும் இது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், குழந்தைகள் நடந்த சம்பவம் குறித்து அச்சப்படதேவையில்லாமல் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுபவர்களின் பெயர் விபரங்கள் பாதுகாக்கப்படும். அதிகபட்சம் புகார் அளித்த 60 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி மேற்கு மண்டலத்தில் திருட்டு, நகைப்பறிப்பு என 977 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஆதாய கொலை 2 நடந்துள்ளது.

நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆதாய கொலைகள் நடக்கவில்லை. கடந்த ஆண்டு 171- ஆக இருந்த நகைப்பறிப்பு சம்பவம் கொரோனா காலத்தில் 74- ஆக பதிவாகியுள்ளது.

நகைப்பறிப்பு சம்பவம் ஈரோட்டில் 23-ம் நாமக்கல்லில் 9-ம் நடந்துள்ளது.கோவை மண்டலத்தில 25 ஆக இருந்த கொள்ளை சம்பவம் 13- ஆக குறைந்துள்ளனது. மாநகரில் 12- ல் இருந்து 4-ஆக குறைந்துள்ளது.

கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறவில்லை. இரவு நேரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்ததாலும் குற்றங்கள் தடுக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News