செய்திகள்
கொரோனா வைரஸ்

சதுரகிரியில் தரிசனம் செய்த 4 பேருக்கு கொரோனா

Published On 2020-09-20 07:00 GMT   |   Update On 2020-09-20 07:00 GMT
மகாளய அமாவாசை நாளில் சதுரகிரியில் தரிசனம் செய்த பக்தர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா ஊரடங்குக்கு பின் கடந்த 1 மற்றும் 2-ந்தேதிகளில் பவுர்ணமி தினத்தில் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவில் நிர்வாகம் கடந்த 17-ந்தேதி மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் சென்று தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தெர்மல் ஸ்கேனர் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே காலை 7 மணி முதல் 1 மணி வரை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

5 மாதங்களுக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

மகாளய அமாவாசை நாளான கடந்த 17-ந் தேதி மட்டும் 10 ஆயிரத்து 800 பக்தர்கள் சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 4 நாட்களில் மொத்தம் 16 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு மலை அடிவாரத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பரிசோதனை முடிவில் சிவகாசி, தேனி, சங்கரன் கோவில், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 4 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கோவிலுக்கு சென்ற மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

பக்தர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News