செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அத்தியாவசிய பொருள் வழங்கும் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகள்: முதலமைச்சர் 21-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

Published On 2020-09-19 09:19 GMT   |   Update On 2020-09-19 09:19 GMT
அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 21-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
சென்னை:

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரின் செயல்முறை ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது அவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்-அமைச்சர் வெளியிட்டார். அவர், “மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்த திட்டம் வரும் 21-ந் தேதி காலை 9 மணிக்கு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த அரசு விழாப் பணிகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த குழு அமைத்து ஆணையிடப்படுகிறது.

குழு உறுப்பினர்களை குழுவின் தலைவர் ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் செய்ய வேண்டிய பணிகள் அறிவிக்கப்படுகின்றன. அவை செய்யப்பட்டுள்ளனவா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

அம்மா நகரும் ரேஷன் கடைகளுக்கான வாகனம் நல்ல நிலையில் உள்ளதையும், சுத்தமாக உள்ளதையும் ஆய்வு செய்ய வேண்டும். வாகனத்தின் முன்புறம், வலது மற்றும் இடப்புறம் பேனர் கட்டப்பட வேண்டும். அந்த பேனர்களின் ஸ்டிக்கர், முதல்-அமைச்சர், முன்னாள் முதல்-அமைச்சர், நகரும் ரேஷன் கடையின் புகைப்படம் இடம்பெற வேண்டும்.

19-ந் தேதியன்றே தொடர்புடைய ரேஷன் கடையைத் திறந்து அத்தியாவசிய பொருட்களை அதில் ஏற்றி தயார் நிலையில் வைக்க வேண்டும். ரேஷன் கடைக்கு தேவையான எடை எந்திரம், பில் போடும் எந்திரங்கள், நாற்காலி, மேஜை போன்றவை இருக்க வேண்டும்.

விற்பனையாளருக்கான முக கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனத்தின் பின்புறத்தில் பொருட்களின் விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் அந்த வாகனங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அந்த வாகனங்களுக்கு வாழை மரம் கட்டி அழகுபடுத்த வேண்டும். வாகன ஓட்டுநர், விற்பனையாளர், விற்பனை உதவியாளர் ஆகியோர் உரிய சீருடை அணிந்து, அடையாள அட்டையுடன் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News