செய்திகள்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை

பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டி- சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலிடம்

Published On 2020-09-19 01:55 GMT   |   Update On 2020-09-19 01:55 GMT
பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டியில், பெரிய மருத்துவமனை பிரிவில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் (ஐ.சி.எம்.ஆர்.) இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான சி.எ.எச்.ஓ. அமைப்பு சார்பில், மருத்துவமனைகளில் பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெளிநாடுகளை சேர்ந்த 7 மருத்துவமனைகள், உட்பட இந்தியாவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றன.

இந்த போட்டிகளுக்கு விண்ணப்பித்த மருத்துவமனைகளின் தரத்தை நிர்ணயம் செய்ய 3 நடுவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள், கோவிட் மற்றும் கோவிட் அல்லாத வார்டுகளில் தொற்று ஏற்படாத பணியாளர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகள் எடுத்த பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் அடிப்படையில் மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த வகையில் இந்த போட்டியின் முடிவுகள் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழகத்தை சேர்ந்த 2 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் மிகப்பெரிய அளவிலான மருத்துவமனை பிரிவில் வேலூரை சேர்ந்த சி.எம்.சி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து 300 முதல் 600 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனை பிரிவில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல் இடம் பிடித்துள்ளது.

மேலும் நடுத்தர அளவு மருத்துவமனையில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு மருத்துவமனையும், சிறிய மருத்துவமனை பிரிவில் பெங்களூருவை சேர்ந்த ஒரு மருத்துவமனையும் முதல் இடம் பெற்றன.

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக சிறப்பாக ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையாகும். ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News