செய்திகள்
உயிரிழந்த மகன்-தந்தை

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்?- சிபிஐக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Published On 2020-09-19 01:52 GMT   |   Update On 2020-09-19 01:52 GMT
சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்? என சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைதான போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

மற்றவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனது உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக கூறி ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், பிரான்சிஸ் ஆகிய 3 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களை மதுரை மாவட்ட கோர்ட்டும், ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தன.

இந்த நிலையில் அவர்கள் மீண்டும் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர்கள் கைதாகி 80 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே அவர்களுக்கு ஜாமீன் அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார். இதையடுத்து, “ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது, அந்த விசாரணை முடிவடைய எவ்வளவு காலம் ஆகும்?” என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News