செய்திகள்
ரமேஷ்

மதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கினார்

Published On 2020-09-18 02:24 GMT   |   Update On 2020-09-18 02:24 GMT
மதுரை அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல் செய்தனர்.
உசிலம்பட்டி:

மதுரை சேடபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருக்கு இதயக்கனி, சந்தோஷ், ரமேஷ் ஆகிய 3 மகன்கள். கன்னியப்பன் தனது குடும்பத்துடன் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு தோட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் இதயக்கனி, இதே ஊரை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் புனிதாவை காதலித்தார். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 2 குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த மாதம் இதயக்கனி- புனிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியாத நிலையில் இதுதொடர்பாக இதயக்கனி குடும்பத்தினர் மீது சாப்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இதயக்கனி சகோதரர்கள் சந்தோஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் அடிக்கடி போலீசார் அழைத்து சென்று விசாரித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு சாப்டூர் போலீசார் ரமேசை விசாரணைக்கு அழைத்துள்ளனர். பெற்றோர் அனுப்ப மறுத்தும் போலீசார் ரமேசை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு சென்ற ரமேஷ் காலை வரை வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரை உறவினர்கள் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர்.

போலீஸ் நிலையத்தில் சென்று கேட்டபோது இரவே வீட்டிற்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள பெருமாள் குட்டம் மலை பகுதியில் உள்ள மரத்தில் ரமேஷ் தூக்கில் தொங்குவதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று ரமேசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் ரமேஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை போலீசார் தாக்கி கொன்று விட்டதாகவும் கூறி ரமேசின் உடலை எடுக்க விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே உடலை எடுக்க அனுமதிப்போம் என கூறினர். இதனைத்தொடர்ந்து பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் போலீசார் மறியல் செய்த உறவினர்கள் மற்றும் கிராமமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் விசாரணை செய்தார். அப்போது சாப்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகண்ணன் மற்றும் 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும் இறந்த ரமேசின் உடலில் காயம் ஏதும் உள்ளதா என வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து ரமேசின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல கிராமமக்கள் அனுமதித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை வரை நடந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மர்மமாக இறந்த ரமேஷ் நாகர்கோவில் அருகே தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்ததும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News