செய்திகள்
கேஎஸ் அழகிரி

நீட் தேர்வு நடைபெற மத்திய அரசுதான் காரணம்- கேஎஸ் அழகிரி அறிக்கை

Published On 2020-09-15 07:13 GMT   |   Update On 2020-09-15 07:16 GMT
நீட் தேர்வு நடைபெற மத்திய அரசுதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீட் தேர்வு குறித்து பேச தி.மு.க. வுக்கும் காங்கிரசுக்கும் தகுதி கிடையாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கையாலாகாத அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஆதாரமற்ற முறையில் அவதூறான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் நீட் தேர்வு 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் தான் முதன்முறையாக திணிக்கப்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில் நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுவதற்கு எது காரணமாக இருந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. ஏனெனில் மத்திய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சிக்காலத்தில் டிசம்பர் 2010 முதல் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் தொடர்ந்து பா.ஜ.க., அ.தி.மு.கவினர் பேசிவருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் இருக்கிற உண்மை நிலையை மூடிமறைக்க அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், ஆதாரமற்ற கருத்துக்களை சட்டசபையில் கூறி, தி.மு.க, காங்கிரஸ் மீது பழிசுமத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் -தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 வரை நீட் தேர்வு நடைமுறைப் படுத்தப்படவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் ஆகஸ்ட் 2016-ல் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்றுச் சொன்னால், அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க. தான் காரணமே தவிர, காங்கிரஸ் கட்சியோ, தி.மு.க.வோ காரணமல்ல என்பதைத் தெளிவாக கூற விரும்புகிறேன்.

மத்திய அரசு திணித்த நீட் தேர்வை தடுப்பதற்கு சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி பிப்ரவரி 2017-ல் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது அ.தி.மு.க அரசு. ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த மசோதாவை எந்த காரணமும் சொல்லாமல் மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்த தகவலை ஓராண்டு காலம் வெளியே சொல்லாமல் தமிழக அரசு ஏமாற்றி வந்தது. நீட் திணிப்பை எதிர்ப்பதன் மூலம் மோடி அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதே அ.தி.மு.க.வின் அணுகுமுறையாகும்.

இத்தகைய அ.தி.மு.க. அரசின் போக்கு காரணமாக தமிழகத்தில் உள்ள கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பின்றி கடுமையான பாதிப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு நீட் தேர்வு காரணமாக நொறுக்கப்பட்டு வருகிறது.

தமிழக, அ.தி.மு.க. அரசால் நீட் தேர்வையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. நீட் தேர்வில் பங்கேற்கிற மாணவர்களையும் அதில் வெற்றிபெறுகிற வகையில் பயிற்சி வகுப்புகளின் மூலம் தயார்படுத்தவும் முடியவில்லை. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுகளை சிதைத்து சீர் குலைத்து படுகுழியில் தள்ளிய தமிழக ஆட்சியாளர்களுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும். இவர்கள் செய்த குற்றத்திற்கு தமிழக மக்கள் அ.தி.மு.க. அரசை மன்னிக்கவே மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News