செய்திகள்
மாணிக்கம் தாகூர் எம்.பி

ராகுலின் அதிரடி முடிவு காங்கிரசை முன்னேற்றும்- மாணிக்கம் தாகூர் எம்.பி

Published On 2020-09-13 09:37 GMT   |   Update On 2020-09-13 09:37 GMT
ராகுலின் தெளிவான முடிவுகள் நிச்சயம் கட்சியை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் செயற்குழு நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.
சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் ப.சிதம்பரத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. மூத்த தலைவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். ராகுல்காந்திக்கு வேண்டியவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று கட்சிக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது.

இது பற்றி காங்கிரஸ் செயற்குழு நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இது வெறும் வதந்தி. அப்படி எதுவும் இல்லை. ப.சிதம்பரம் கட்சியில் மூத்த தலைவர் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

இப்போதுதான் முதல் முறையாக காரிய கமிட்டி உறுப்பினராகவே ஆக்கப்பட்டுள்ளார். சீனியர், ஜூனியர் என்று எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை.

கேள்வி:- அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களை ராகுல் ஓரம் கட்டியதாக கருதப்படுகிறதே?

பதில்:- அந்த கருத்தும் தவறு. 2014, 2019 ஆகிய இரண்டு பாராளுமன்ற தேர்தல்களையும் மூத்த தலைவர்களை வைத்துதான் சந்தித்தார் முடிவு என்ன?

அமைப்பு ரீதியாக சில சீரமைப்புகளை செய்கிறார். அதற்கு ஒத்துழைத்துத்தான் பார்க்க வேண்டும். கவுரவம் என்பதைவிட கட்சிதான் முக்கியம்.

கேள்வி:- அமைப்பு ரீதியாக மாற்றுகிறார் சரி. அவர் பொறுப்புக்கே வராமல் ஒதுங்குகிறாரே...

பதில்:- அவர் கட்சியை விட்டு செல்லவில்லையே. அவர் ஒதுங்க என்ன காரணம் என்பதை யோசிக்க வேண்டும்.

அவரை அமைப்பு ரீதியாக எந்த முடிவையும் எடுக்க விடவில்லை. மோடி ஆட்சியின் அவலங்களை கடுமையாக எதிர்க்க ஒத்துழைக்கவில்லை. பல இடங்களில் தான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார். அவர் எழுதிய கடிதத்தை படித்தாலே புரியும். எனவேதான் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறார். அந்த மாற்றத்தை எதிர்பார்த்துதான் கட்சியில் செயல்படுகிறார்.

கேள்வி:- அவருக்கு வேண்டியவர்கள் பலர் பொறுப்புக்கு வந்திருப்பதால் இனியாவது தலைவர் பதவியை ராகுல் ஏற்பாரா?

பதில்:- தலைவர் பதவிக்கு அவர் வரவேண்டும் என்று விரும்புகிறோம். வருவார் என்று நம்புகிறோம். விரைவில் கட்சியின் அமைப்பு தேர்தல் நடக்க உள்ளது. அப்போது தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

கேள்வி:- குலாம் நபி ஆசாத் போன்ற சீனியர் தலைவர்களின் முக்கிய பொறுப்புகள் பிடுங்கப்பட்டுள்ளதே.

பதில்:- யார் சொன்னது? குலாம் நபி ஆசாத் மூத்த தலைவர். காரிய கமிட்டி உறுப்பினராக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகிறார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராகவும் இருக்கிறார்.

கிரிக்கெட் மட்டையை கொடுக்காமல் களத்தில் நின்று விளையாட சொன்னால் எப்படி இருக்கும்? ஒரு சான்ஸ் கொடுத்து விளையாட சொன்னால் எப்படி இருக்கும்? ஒரு சான்ஸ் கொடுத்தால்தானே விளையாட்டின் திறமை தெரியும். அதே போன்றுதான் கட்சியிலும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ராகுலின் தெளிவான முடிவுகள் நிச்சயம் கட்சியை வலுப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News