செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு- கடம்பூர் ராஜூ பேட்டி

Published On 2020-09-10 13:44 GMT   |   Update On 2020-09-10 13:44 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி:

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளிக்கூடங்களில் கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டதால், ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 1:30 என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக கியூப் மூலம் தான் படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த கட்டணத்தை திரைப்பட தயாரிப்பாளர்கள் வழங்கி வருகின்றனர். இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர். அப்போது, அந்த கட்டணத்தை 50 சதவீதமாக அரசு குறைத்தது. தற்போது, திரையரங்கு உரிமையாளர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக விரைவில் முதல்-அமைச்சரின் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தியேட்டர்களை திறப்பதற்கு மத்திய அரசு எந்த வழிமுறைகளையும் வெளியிடவில்லை.

ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, சில தவறுகள் நடக்கிறது. பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை செயலாளர் அறிவித்து உள்ளார்.

மேலும் முதல்-அமைச்சர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆய்வு செய்ய வர உள்ளார். மக்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து உள்ளனர். ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தந்து உள்ளார். இந்த ஆய்வு கூட்டம் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை வழங்கும் நல்ல கூட்டமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News