செய்திகள்
பொன் ராதாகிருஷ்ணன்

சீனாவின் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயார்- பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2020-09-07 13:04 GMT   |   Update On 2020-09-07 13:04 GMT
இந்தியாவிடம் சீனா வாலாட்ட முடியாது. சீனாவை எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி:

கொரோனா காலத்தில் மத்தியஅரசு கொண்டுவந்த மக்கள் நல திட்டங்களை விளக்கி தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலூர் இப்ராகிம் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தொடர் பிரசார யாத்திரை மேற்கொள்கிறார். அதன் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்து பேசியதாவது-

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது சீரிய முயற்சியால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு, உயிரிழப்பு குறைந்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறையின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்புக்கு உள்ளான லட்சக்கணக்கானோர் குணமடைந்து நோயிலிருந்து தப்பி உள்ளனர்.

இந்தியாவிடம் சீனா வாலாட்ட முடியாது. சீனாவை எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. சீனாவின் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு தயாராக உள்ளது.

கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டதிட்டங்களை விளக்கி ஒரு முஸ்லீம் யாத்திரையை தொடங்கி உள்ளார். தமிழ் நாடு முழுவதும் அவர் யாத்திரை செல்கிறார். அவரது யாத்திரைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

பின்பு கன்னியாகுமரி பஜார் பகுதியில் உள்ள கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கொரோனா காலத்தில் மத்தியஅரசு கொண்டுவந்த சட்டதிட்டங்கள் குறித்த விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பொன் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா குமரி மாவட்ட தலைவர் தர்ம ராஜன், துணைத்தலைவர் முத்துராமன், முன்னாள் கோட்ட இணை பொறுப்பாளர்கள் தர்மபுரம கணேசன், வேல் பாண்டியன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சுயம்புலிங்கம், பொதுச்செயலாளர் பெருமாள், கன்னியாகுமரி நகர பொறுப்பாளர் சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தொடர் பிரசார யாத்திரை வருகிற 30-ந்தேதி சென்னை மெரீனா கடற்கரையில் நிறைவடைகிறது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் பிரசாரத்தை முடித்து வைக்கிறார்.

Tags:    

Similar News