செய்திகள்
உயிரிழந்த மகன்-தந்தை

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு- சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

Published On 2020-09-03 03:28 GMT   |   Update On 2020-09-03 03:28 GMT
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி, வக்கீல் உள்பட 9 பேரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நிகழ்ந்த சாத்தான்குளம் போலீஸ் நிலையம் மற்றும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீடு, அவர்களது செல்போன் கடை உள்ளிட்ட இடங்களில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பென்னிக்சின் தாயாரான செல்வராணியை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து, அவரிடம் ரத்த மாதிரியை சேகரித்தனர். தொடர்ந்து அங்கு ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோருக்கு பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சி.பி.ஐ. அதிகாரி சாமி தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் 12.30 மணிக்கு சாத்தான்குளத்துக்கு வந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் பஜாரில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையை பார்வையிட்ட அவர்கள், பின்னர் அதன் அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் உரிமையாளர் பிரபுவிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது கடை அருகில் உள்ள பழக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் ரவிராஜன், சேசுராஜன், அரிவின், பல் ஆஸ்பத்திரி டாக்டர் தாம்சன், சைக்கிள் கடை உரிமையாளர் சுப்பிரமணியன் ஆகியோரிடமும் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார்கள்.

பின்னர் பென்னிக்சின் நண்பர்களான வக்கீல்கள் மணிமாறன், ராஜாராம் ஆகியோரது அலுவலகத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆட்டோ டிரைவர் மணியிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர்.

இந்த வழக்கில் மற்றொரு சாட்சியான மரக்கடை ஊழியர் துரை சமீபத்தில் விபத்தில் காயம் அடைந்தார். எனவே அவரிடமும், இன்னொரு சாட்சியான ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்திடமும் பின்னர் விசாரிப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 1½ மணி நேரம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News