செய்திகள்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கொரோனா இல்லாத மாவட்டமாக மதுரை விரைவில் மாறும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Published On 2020-09-01 09:34 GMT   |   Update On 2020-09-01 09:34 GMT
மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா இல்லாத மாவட்டமாக மதுரை விரைவில் மாறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் உள்ளிட்ட சுமார் 2500 பேருக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கும் பணியினை அம்மா கிச்சன் செய்து வருகிறது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது சொந்த நிதியில் இருந்து அம்மா சாரிடபிள் டிரஸ்டு மூலம் 59-வது நாளாக தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார்.

இன்று காலை தனது குடும்பத்தினருடன் அம்மா கிச்சனுக்கு சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அங்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவு வகைகளை பார்வையிட்டார். பின்னர் உணவு பொட்டலங்களை குடும்பத்துடன் அமர்ந்து பார்சல் செய்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரவு பகல் பாராது சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழகத்தை பின்பற்றும் வகையில் கொரோனா ஒழிப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பணியிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தங்கள் அன்றாட பணிகளை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வரும் அரசு காட்டும் வழிமுறைகளை கண்டிப்புடன் கடை பிடித்தால் கொரோனா தொற்றை விரைவில் முற்றிலும் ஒழிக்கலாம். மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தாலும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மதுரை மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா இல்லாத மாவட்டமாக மதுரை விரைவில் மாறும்.

எனவே அரசு அறிவித்துள்ள தளர்வுகளை கடைபிடிப்பதில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்களை கண்டிப்புடன் கடைபிடிப்பதுடன் அரசுக்கும் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து அனைவரும் விரைவில் விடுபடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News