செய்திகள்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Published On 2020-08-27 12:05 GMT   |   Update On 2020-08-27 12:05 GMT
தமிழகத்தில் இனி தி.மு.க.வால் ஆட்சிக்கு வரமுடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை:

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள ஓட்டல்களை மீண்டும் திறக்க கோரி மதுரை டிராவல் கிளப் சார்பில் அதன் நிர்வாகிகள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதுதொடர்பாக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதியளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்கள் அதிகமாக கொரோனா தொற்று பாதிப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் நோய் தொற்று படிப்படியாக குறைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் ஒற்றை இலக்க அளவில் தொற்றை குறைக்க தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தினமும் சுமார் 3,500 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வரும்நிலையில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதமாக குறைந்துள்ளது.

எனவே மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து நோய் தொற்றை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைப்ப தர வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கிடும் வகையில் மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா கிச்சன் மூலம் 54-வது நாளாக சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடைசி நோயாளி இருக்கும் வரை அம்மா கிச்சன் தொடர்ந்து செயல்படும்.

தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. மட்டுமே மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு செயல்படுகிறது. தி.மு.க. வினர் அதிகார பசியில் திரிகிறார்கள். அவர்களுக்கு தீனி கிடைக்காது. புரட்சி தலைவியின் பிள்ளைகள் ஒற்றமையுடன் இருந்து அவரது லட்சிய கனவை நிறைவேற்றுவோம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார். அவரது பகல் கனவு பலிக்காது. தி.மு.க.வினரின் அட்டகாசங்களை மக்கள் மறந்துவிட வில்லை. எனவே தமிழ்நாட்டில் இனி மேல் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News