செய்திகள்
சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் கணவன்- மனைவியிடம் போலீசார் பேச்சுவார்த்தை

குடிநீர் கேட்டு நடுரோட்டில் போராட்டம் நடத்திய கணவன்- மனைவி

Published On 2020-08-14 09:28 GMT   |   Update On 2020-08-14 09:28 GMT
நாகர்கோவிலில் குடிநீர் கேட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய கணவன்- மனைவியிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. அப்படி தோண்டப்படும் போது குடிநீர் குழாய்கள் உடைபடுதல், கேபிள் துண்டிக்கப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. அப்படி உடைபடும் குடிநீர் குழாய்களை சீரமைக்க காலதாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகமும் தடைபட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில் பீச்ரோடு- செட்டிகுளம் சந்திப்பு சாலையில் குடிநீர் திட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அவ்வாறு தோண்டும் போது அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் ஏற்கனவே போடப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்த பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் என்பவர் தனது மனைவியுடன் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினார். அதாவது அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி கிடக்கும் இடத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த கோட்டார் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஜார்ஜ் ஜோசப்பையும், அவருடைய மனைவியையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் கணவன்- மனைவி இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News