செய்திகள்
வாகனங்களையும், பயணிகளின் உடைமைகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது எடுத்தபடம்.

திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு- சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை

Published On 2020-08-14 07:13 GMT   |   Update On 2020-08-14 07:13 GMT
சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
செம்பட்டு:

சுதந்திர தினவிழா நாளை(சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநகரில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில் 500 போலீசாரும், மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் 1,000 போலீசாரும் சேர்த்து மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து வழிபாட்டுதலங்கள், பாலங்கள், ரெயில்வே தண்டவாளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது தவிர, வெடிகுண்டு தடுப்புபிரிவு போலீசாரும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி திருச்சி விமான நிலையம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிலையம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்த சோதனை வருகிற 18-ந்தேதி வரை நடைபெறும். விமான நிலைய வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News